Tuesday, April 12, 2011

லஞ்சத்தை வேரோடு அறுக்க, மக்களுக்கு பயிற்சி: மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் உறுதி


கோவை: மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் 36 பேரும், தேர்தலில் வெற்றி தோல்வியை பொருட்படுத்தாமல், எம்.எல்.ஏ.,வாகவோ அல்லது நிழல் எம்.எல்.ஏ.,வாக (தோல்வியுறும்பட்சத்தில்) செயல்படுதல்; தேர்தல் அறிவிப்பு நாளில் இருந்து இன்று வரை, வாக்காளர்களுக்கு பணம், மது வழங்கவில்லை, இனியும் வழங்க மாட்டோம்; ஊழலால் பாதிக்கப்பட்டவருக்கு தகுந்த நீதிக்காக பாடுபடுதல்; லஞ்சம் எனும் கொடிய நோயினை வேரோடு அறுக்க, மக்களுக்கு பயிற்சிகளை வழங்குதல்; மக்கள் பிரச்னைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முயற்சிகளை தன்னார்வ ரீதியில் அணுகி, தீர்வு கிடைக்கச் செய்தல் ஆகிய உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென, மக்கள் சக்தி என்னும் கட்சி தேர்தல் களத்தில் குதித்தது. தமிழகத்தில் 36 வேட்பாளர்களில், கோவையில் 6 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, நேற்று பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், பொதுமக்களும் பங்கேற்றனர். இதில், மக்கள் சக்தி வேட்பாளர்கள் ஆறு பேரும் பொதுமக்கள் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் 36 பேரும், தேர்தலில் வெற்றி தோல்வியை பொருட்படுத்தாமல், எம்.எல்.ஏ.,வாகவோ அல்லது நிழல் எம்.எல்.ஏ.,வாக (தோல்வியுறும்பட்சத்தில்) செயல்படுதல்; தேர்தல் அறிவிப்பு நாளில் இருந்து இன்று வரை, வாக்காளர்களுக்கு பணம், மது வழங்கவில்லை, இனியும் வழங்க மாட்டோம்; ஊழலால் பாதிக்கப்பட்டவருக்கு தகுந்த நீதிக்காக பாடுபடுதல்; லஞ்சம் எனும் கொடிய நோயினை வேரோடு அறுக்க, மக்களுக்கு பயிற்சிகளை வழங்குதல்; மக்கள் பிரச்னைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முயற்சிகளை தன்னார்வ ரீதியில் அணுகி, தீர்வு கிடைக்கச் செய்தல் ஆகிய உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த, கட்சியின் மாநில தலைமைக் குழு உறுப்பினர் மற்றும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் விஜய்ஆனந்த் பேசியது: வெற்றி தோல்வியை கருத்தில் கொள்ளாமல், வரும் 14ம் தேதி முதல் எம்.எல்.ஏ., போன்று செயல்படுவோம். பிரசாரத்தை வெற்றிகரமாக, புதுமையான அணுகுமுறையில் இருந்தது. எங்கள் வேட்பாளர்கள் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இதை தேர்தல் கமிஷன் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். வரும் நாட்களிலும் கடமை உணர்வோடு, கட்டுப்பாடுடன் நடப்போம். எம்.எல்.ஏ., பொறுப்பேற்றவுடன், திட்டங்களை முழுமையாகக் கொண்டு செல்வோம். சட்டசபைக்கு வெளியில் இருந்தாலும், எம்.எல்.ஏ., போன்று மக்கள் பிரச்னையில் பங்கேற்போம், என்றார்.

கிணத்துக்கடவு வேட்பாளர் இளங்கோ கூறுகையில், ""எங்களது நோக்கம் தனிப்பட்டவரை தாக்குவதல்ல; நல்லது செய்ய வேண்டும். கல்வித்தரம் குறைந்து வருகிறது. எட்டாம் வகுப்பு வரை பாஸ் என்பது தவறான ஒன்று; இது எந்த நாட்டிலும் இல்லை. இலவசங்களை கண்டு ஏமாறக்கூடாது'' என்றார்.

கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் துரைராஜ் பேசுகையில், ""ஒவ்வொரு வேட்பாளர்களையும் சந்தித்தோம். இரு கூட்டணிக்கும் எதிரான உணர்வினை மக்கள் வெளிப்படுத்துகின்றனர். பிரசாரத்தின் போது ஒரு பெரியவரை சந்தித்தேன்; எங்களது கொள்கையை கேட்டுக் கொண்டு என்னிடம் "காமராஜருக்கு பிறகு, 30 ஆண்டுகளாக நான் வேறு யாருக்கும் ஓட்டளிக்கவில்லை; உன்னை தலைவனாக ஏற்றுக்கொண்டு ஓட்டளிக்கிறேன்'' என்றார்.

இதை சொல்லி முடிப்பதற்குள், எங்கள் மீது இப்படி நம்பிக்கை வைத்திருக்கிறார்களே என்று துரைராஜ் விக்கிவிக்கி அழுதார். தொடர்ந்து பேச முடியாதவாறு, மக்களின் மீதுள்ள உண்மையான பாசம், அவரது தொண்டையை அடைத்தது. கூட்டத்தில் இருந்த அனைவரது மனதையும் நெருடியது. தொடர்ந்து இதர வேட்பாளர்கள் தங்களது கருத்துகளை கூறினர்

No comments:

Post a Comment