Friday, November 26, 2010

நிரா ராடியா உரையாடல் விவகாரத்தில் சி.பி.ஐ., நடவடிக்கை தேவை': ஜெ



ஸ்பெக்ட்ரம்' ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கியவர்களுக்கும், அரசியல் வியாபாரியும், அதிகார மையத்திடம் அதிக செல்வாக்கு பெற்றவருமான நிரா ராடியாவுக்கும் இடையே நடைபெற்ற முக்கியமான தொடர் உரையாடல் காட்சிகள், குறிப்பாக தமிழக மக்களால் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. நிரா ராடியாவின் தவறான போக்கை உணர்ந்த வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அப்பொழுதே அவரை கண்காணித்தன. மிகப்பெரிய நிறுவனங்களுக்கு சலுகைகள் செய்து, அதன் மூலம் சட்ட விரோதமான முறையில் அரசியல்வாதிகளுக்கு வரும் பணத்தின் பாதையை ஆராயும் முயற்சியில் ஈடுபட்டு, அதை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் நிரா ராடியாவின் போன், மொபைல் போன்களின் உரையாடல்களை குறிப்பிட்ட சில நாட்களுக்கு வருமான வரித்துறை பதிவு செய்தது. 500 மணி நேரத்திற்கும் மேலாக போன் உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இதில், 15 நிமிடங்களுக்கும் குறைவான உரையாடலைத் தான் ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன. இந்த உரையாடல், முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினரின் சுயரூபத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அம்பலப்படுத்தியுள்ளது.


ஊடகங்களால் வெளியிடப்பட்ட இந்த உரையாடல் பதிவு, இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்கும் சமயத்தில், தி.மு.க., உறுப்பினர்களுக்காக அல்ல. தன் மிகப் பெரிய குடும்பத்தைச் சார்ந்த பல்வேறு உறுப்பினர்களின் வருவாயை பெருக்கும் நோக்கத்தில், மத்திய அரசிடமிருந்து வளம் கொழிக்கும் துறைகளை பெறுவதற்காக கருணாநிதியால் நடத்தப்பட்ட பேரத்துடன் தொடர்புடையது. நிரா ராடியாவிற்கும், கருணாநிதி குடும்பத்திற்கும், காங்கிரஸ் தலைமைக்கும் இடைத் தரகராக வெளிப்படையாக செயல்பட்ட மூத்த பத்திரிகையாளர் வீர்சங்விக்கும் இடையே நடத்தப்பட்ட உரையாடல் தமிழகத்தில் உள்ள கூட்டணிக் கட்சியை, மத்திய காங்கிரஸ் தலைமை எந்த அளவுக்கு கேவலமாக நடத்தி இருக்கிறது என்பதை காட்டுகிறது. தி.மு.க., என்பது கருணாநிதியின் குடும்பம் மட்டும் தான் என்பதையும், இந்தக் குடும்பத்திலுள்ள பல நபர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டாலும் அதிகார வெறியும், பணத்தின் மீதான பேராசையும் தான் இவர்களை இன்னமும் ஒன்றாக இணைத்து வைத்துள்ளது என்பதையும் இந்த பதிவு படம் பிடித்துக் காட்டுகிறது.


இந்த உரையாடல் பதிவுகள் வருமான வரித்துறையின் வசம் உள்ளன. மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்க இயக்கத்திடமும் இந்த உரையாடல் பதிவுகள் உள்ளன. இந்த அமைப்புகள் எல்லாம் உண்மையிலேயே சுதந்திரமாக செயல் படுகிறது என்றால், பொது வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதாக கூறிக் கொள்ளும் நபர்களை விசாரிப்பதில் எந்த நிர்பந்தமும் மேற்படி அமைப்புகளுக்கு இல்லையென்றால், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
From Dinamalar