Saturday, February 27, 2010

இலவசம் எனும் மாய நிழல்


எதிர்க்கட்சித் தலைவர், ஜெயலலிதா போனால் போகிறது பிழைத்துப் போங்கள் என்று, ஆறு மாதத்திற்குப் பின் சட்டசபைக் கூட்டத்துக்கு வந்து, தி.மு.க., அரசு மீது அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை அள்ளி வீசிவிட்டு, சென்றிருக்கிறார். அதில் முக்கியமானது, தமிழக அரசுக்கு உள்ள மொத்த கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாய் என்பதும், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 15 ஆயிரம் ரூபாய் கடனுடன் பிறக்கிறது என்பதாகும்.


இவற்றுக்கு முதல்வர் கருணாநிதி, சில நாட்கள் முன், மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், மொத்த கடன் 76 ஆயிரம் கோடி ரூபாய் தான் என்றும், பிறக்கும் குழந்தைக்கு 13 ஆயிரம் ரூபாய் தான் கடன் என்றும், கடன் வாங்காமல் எந்த அரசும் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். அருமையான, மிக நல்ல விளக்கம் இது! "வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் இரண்டணா, கடைசியில் துந்தனா' என்று தான் இது முடியும். தமிழக அரசுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன்; மத்திய அரசுக்கு, பல லட்சம் கோடி கடன். இவை அனைத்தையும், வெளிநாடுகளில் குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்திய அரசியல்வாதிகளின், ஊழல் மூலம் சம்பாதித்த பணம் 93 லட்சம் கோடி ரூபாயை மீட்டுக் கொண்டு வந்தாலே, நிமிடங்களில் அடைத்து விடலாம். இதைச் செய்ய, மத்திய அரசை வற்புறுத்தி இதுவரை தி.மு.க., எம்.பி.,க்களோ அல்லது அ.தி.மு.க., எம்.பி.,க்களோ பார்லிமென்டில் பேசி இருக்கின்றனரா என்றால், இல்லை என்பது தான் பதில். யாராவது தன் தலையில், தானே மண் அள்ளி போட்டுக் கொள்வரா?


"கடன் வாங்காமல் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாது' என்று, முதல்வர் சொல்வதற்கு காரணம், திருமணமாகாத பெண்களுக்கு திருமணச் செலவுக்கு அரசு மானிய உதவி, கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு மானியம், குழந்தைகளுக்கு இலவச சத்துணவு, இலவச பள்ளிப் படிப்பு, இலவச கல்லூரி படிப்பு, பெரியவர்கள் ஆனவுடன் இலவச வேட்டி, சேலை, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச காஸ் இணைப்பு, இலவச காஸ் அடுப்பு, குடிசைகளுக்கு இலவச மின்சாரம், இலவச நில பட்டா, இலவச வீட்டு மனைப்பட்டா, 40 வயது கூட நிரம்பாதவர்களுக்குகெல்லாம் முதியோர் பென்ஷன், செத்த பின் சுடுகாட்டு செலவுக்கு அரசு மானியம், இலவச "டிவி' இன்னும் பலப்பல.


இப்படிப்பட்ட இலவசங்களால், வெகு சீக்கிரமே தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படப் போகிறது; விவசாயம் பாதிக்கப்படப் போகிறது. இப்போதே தொழிற்சாலைகளில் வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை. எல்லாம் இலவசமாக கிடைக்கும் போது, யாரும் வேலை பார்க்க தயார் இல்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும், அவர்கள் வழக்கத்தை காட்டிலும் அதிகமான சம்பளம் எதிர்பார்க்கின்றனர். அதிக சம்பளம் கொடுத்தால், உற்பத்திப் பொருட்களின் விலைவாசி தானாகவே உயரத்தான் செய்யும். இது தவிர, சமையல் காஸ் இணைப்பு போன்றவற்றை இலவசமாக கொடுத்து விட்டு, அதே நேரம், காசு கொடுத்து ரீபில் சிலிண்டர் வாங்க வருபவர்களுக்கு இல்லை என்று சொல்கின்றனர் அல்லது 25 நாட்கள் கழித்து தான் பதிவோம் என்கின்றனர். பதிந்த பின் 15 நாட்கள் கழித்து சிலிண்டர் கொடுக்கின்றனர். இலவசமாக கிடைக்கும், காசு கொடுத்தால் கிடைக்காது என்ற நிலைமை, உலகில் வேறு எங்காவது பார்க்க முடியுமா?


பொதுமக்களில் அனைத்து தரப்பினரையும் சாராயம் குடிக்க வைத்து, குடிகாரர்களாக்கி இதில் ஆண்டுக்கு கிடைக்கும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை, இலவச திட்டங்களுக்கு அரசு செலவிடுகிறது. மின்சார வாரியத்தில், நஷ்டத்தை மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து, ஆண்டுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்குகிறது. இது தவிர, மத்திய அரசின், ஐந்தாண்டு திட்டப் பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்துக்கு கொடுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாயை, இலவச சத்துணவுத் திட்டத்திற்கும், இதர பிற இலவச திட்டங்களுக்கும் செலவழிக்கிறது. ஆக, ஐந்தாண்டுத் திட்டத்திற்கு திட்டமிடப்பட்ட பணிகள் எதுவும் செய்யப் படுவதில்லை. அப்படியே ஒருவேளை செய்தால், இருக்கவே இருக்கிறது, உலக வங்கியிடம் கடன் அல்லது வெளிநாடுகளில் கடன் அல்லது வேறு எங்கெல்லாம் கடன் வாங்க முடியுமோ அங்கெல்லாம் கடன். பின் ஏன், தமிழக அரசின் கடன் சுமை 76 ஆயிரம் கோடியைத் தொடாது? இப்படி, மேன்மேலும் கடன் வாங்கிக் கொண்டே சென்றால், எப்போது, எப்படி இந்த கடனையெல்லாம் அடைப்பது? அதுவரையில் இதற்கு செலுத்தும் வட்டித் தொகை எவ்வளவு ஆகும்?


இலவசங்களையும், மானியங்களையும் ரத்துச் செய்தால் தான், நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று, முன்பு பேசிய பொருளாதார நிபுணரும், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும், இந்நாள் இந்திய பிரதமருமான மன்மோகன் சிங், இங்கு நடக்கும் அத்தனை கூத்துக்களையும் வாய் திறவாமல், மவுனமாக பார்த்துக் கொண்டிருக்கிறாரே... ஏன்? ஓட்டு வங்கி அரசியல் தான் காரணம். ஆக்ஸ்போர்ட்டில் பயின்ற, ஆசியாவில் பொருளாதாரப் புலி என்று பெயர் பெற்ற, ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போதும் சரி, இப்போதும் சரி, தமிழக அரசின் இலவசங்களைப் பற்றியும், மானியங்களைப் பற்றியும், வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. "மாறாக, இலவச "டிவி' திட்டமும், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டமும் சாத்தியமானது தான்' என்று புகழ்ந்துரைத்தார். காரணம், தானும், தன் வழித் தோன்றல்களும், தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்ற ஆசையால் தான்.


ஆக, இப்போது எல்லா இலவச திட்டங்களுக்கும் சிகரமாக, பனிரெண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் செலவில் 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் இலவசமாக கட்டித் தரப் போகின்றனராம். 1970ம் ஆண்டுகளில் கட்டிய குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி கட்டடங்கள் பல இடிந்து விழுந்து விட்டன. மீதமுள்ளவை, மிகுந்த சேதமடைந்து, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், வெறும் களிமண்ணாலும், சுண்ணாம்பாலும், கற்களாலும், கரிகால் சோழ மன்னனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை இன்றளவும், காலத்தை வென்று நிற்கிறது. நெல்லை மாவட்டத்தில், அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சிக்கு இடையே தாமிரபரணி ஆற்றின் மேல் 1870ல் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் வெறும் செங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்டிருக்கும் ஒரு பழைய பாலத்தை பொதுப் பணித் துறையினர் இடிக்க முயற்சி செய்து, இடிக்க முடியவில்லை. பாலம், மிகவும் வலுவாக உள்ளது என்று, விட்டு விட்டுச் சென்றனர். அந்த பழைய பாலம் இன்றளவும், காட்சிப் பொருளாக உள்ளது.


அதே சமயம், கட்டி முடித்து 15 ஆண்டுகள் கூட நிறைவடையாத சமத்துவபுர வீடுகள் பல, பொல, பொலவென்று உதிர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த நிலைமையில், மக்கள் பணம் பனிரெண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாயை செலவு செய்து, 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டினால் அவை எப்படி இருக்கும். இப்படி அரசுப் பணம், அதாவது, மக்களின் வரிப்பணம், விழலுக்கு இறைத்த நீர் போல வீணாக போனால், அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள், சாலை வசதிகள், புதிய ரயில் பாதைகள் போட பணம் எங்கிருந்து ஒதுக்க முடியும்? சரி, ரயில்பாதை திட்டம் தான் இல்லை... நான்கு வழிச்சாலை திட்டமாவது தமிழகம் முழுவதும் நிறைவேறுமா? இவற்றை எல்லாம் எதிர்த்துப் போராட, இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கோ, வர்த்தக சங்கங்களுக்கோ, பிற பொது நல அமைப்புகளுக்கோ, எண்ணமோ, துணிவோ, திராணியோ இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.


மொத்தத்தில், இலவசங்கள், இன்று வேண்டுமானால் இனிக்கலாம்; பின்னாளில், இதன் விளைவுகளாக, வேலைக்கு ஆள் பற்றாக்குறை, தொழில்கள், விவசாயம் நசிந்து போதல், உணவு உற்பத்தி குறைவு, விலைவாசி உயர்வு, இன்னும் பல எதிர்பாராத பிரச்னைகளை தமிழகம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது உறுதி. அதற்குள் தமிழர்கள் விழித்துக் கொண்டால் நல்லது.


                                                                                   - டாக்டர்.வி.ராதாகிருஷ்ணன் -

Thursday, February 4, 2010

என்.கே.கே.பி.ராஜா - பினாமிகள் நிலஆக்கிரமிப்பு

என்.கே.கே.பி.ராஜா பதவியில் இருந்து நீக்கபட்டார். ஆனால் அவரின் பினாமிகள், ஆட்களின் கொட்டம் இன்னும் அடங்க வில்லை. இவர்களின் ஆட்டம், அராஜகம், கட்டபஞ்சாயத்து ஈரோடு மாவட்டம் சில பகுதிகள், திருப்பூர் மாவட்டம் - காங்கயம், நத்தகாடையூர் பகுதிகளில் பரவி உள்ளது. இவர்களின் ஆட்கள் சர்வ சாதாரணமாக பாமரன்களை மிரட்டி, வதைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இவர்களது நிலஆக்கிரமிப்பு, குடுசை போடுதல், ஆள்கடத்தல், கட்டபஞ்சாயத்து, வேலி பிடுங்குதல், பட்டா மாற்றம் செய்வது, மிரட்டலுக்கு பயந்து யாரும் தொழில் செய்ய பயபடும் நிலமை இருக்கிறது.

இரவோடு இரவோடாகா குடிசை போட்டு, ஆட்களுக்கு கிடா விருந்து வைத்து நிலஆக்கிரமிப்பு செய்கிறார்கள். முடியாதபட்சத்தில் கிடைத்தவரை பேரம் பேசி 'சுருட்டிக்கொள்வது' எனும் முயற்சியில் நில உரிமையாளரிடம் பேசுகின்றனர். நாளுக்கு நாள் நில மதிப்பு அதிகரித்து வருவதால், நில உரிமையாளர்களும் பணத்தை கொடுத்து, நிலத்தை திரும்ப பெரும் நிலைமை இருந்து வருகிறது. ஆளும் கட்சி ஆட்கள் என்பதால் யாரும் பகைத்து கொள்ள விரும்புவது இல்லை.

காங்கயம், நத்தகாடையூர், முள்ளிபரம் பகுதிகளில் தினமும் இது போன்ற பிரச்சனைகள் லோக்கல் போலீஸ் கிக்கு வந்தாலும்
இவர்கள் பொதுவாக ஆளும் கட்சி என்பதால் அரசியல் பவரால், கைகள் கட்டுப்பட்ட லோக்கல் போலீஸ், இந்த குற்றவாளிகளை மறைமுகமாகவும், சில நேரங்களில் நேரடியாகவும் உதவி செய்கிறது. காங்கயம் நகரில் என்.கே.கே.பி.ராஜாவின் பினாமிகளின் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் ஒழிக்கப்படாமல் இருந்து வருகிறது. காங்கயம் போலீஸ் இது போன்ற கேஸ்களை SPக்கு தெரியாமல், நில உரிமையாளரிடம் பேரம் பேசி முடித்து வைப்தாக தகவல்கள் வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு,
நிலஆக்கிரமிப்பு சம்பவம் தொடர்பான புகார் பெற்றும் வழக்கு பதியாமல் கிடப்பில் போடப்பட்டதாகா காங்கயம் போலீஸ் மீது புகார் கூறப்பட்டு இருக்கிறது.

இதில் அதிகம் பாதிக்கபடுவது நடுத்தர வர்க்கத்தினர், பாமரன்கள் தான். குருவி போல் சேமித்த பணத்தில் இடத்தை வாங்கும் பாமரன்களிடம், பிரச்னை உண்டு பண்ணி 10 லட்சம் ரூபாய் பணம் கொடு, 20 லட்சம் ரூபாய் பணம் கொடு, சமரசம் பேசலாம் இல்லை என்றால் குடிசை போட்டு ஆக்கிரமிக்கும் இவர்கள், அதை தன் வசப்படுத்த முழு முயற்சி செய்கின்றனர்.

இதனால் நடுத்தர வர்க்கத்தினர், இந்த அபகரிப்பு கும்பலைக் கண்டு அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். சொத்துக்காக கொலையே நடக்கும் இந்தக் காலத்தில், அரசியல், அதிகாரம் இல்லாத நடுத்தர வர்க்கத்தினர் என்ன தான் செய்ய முடியும்? ஆளும் கட்சி ஆட்கள் மீது கேஸ் போட்டால், பாமரன்கள் குடும்பத்தை மிரட்டலாம், கடத்தலாம். இல்லை கேஸ் தான் நிற்குமா?

கஷ்டபட்டு இடத்தை வாங்கினால் கொஞ்சம்குட சம்பதம் இல்லாத இவர்கள் '10 லட்சம் ரூபாய் பணம் கொடு', '20 லட்சம் ரூபாய் பணம் கொடு' என்பது எப்படி நியாயம் ?

ஒய்வு எடுக்க வேண்டிய வயதில் இரவு பகல் பாராது மக்களுக்குக்கா உழைக்க்ம் கலைஞர் ஆட்சியல், இப்படி தி.மு.கா பெயரை சொல்லி அராஜகம் நடக்கலாமா?

பதவி நீக்க பட்ட ஒருவரின் பினாமிகள் இப்படி அராஜகம் செய்தால், பதவியில் இருக்கும் அமைச்சர், அதிகாரிகளை யார் கேட்பது?

தி.மு.கா வின் மேல் மட்ட அதிரடி நடவடிக்கை காங்கயம் பகுதிக்கு தேவை. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யபட்டு தி.மு.கா பெயரை சொல்லி அராஜகம் பண்ணும் இவர்களை களைய வேண்டும். இல்லை என்றால் தி.மு.கா வின் ஒட்டு வங்கி ஈரோடு, திருப்பூர் மாவட்டம் - காங்கயம் பகுதிகளில் மிகவும் பாதிக்க படும்.