Saturday, April 30, 2011

ரிவர்ஸ் கியரில் போகிறது தமிழ்நாடு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=233813

வளர்ச்சித் துறைகளில் தமிழகம், மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து வந்துள்ளது. தொழில், விவசாயம் மற்றும் சேவைத் துறைகளில், தமிழகத்தின் வளர்ச்சி அதிகரித்து, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருந்தது. காமராஜர் மற்றும் பக்தவத்சலம் முதல்வர்களாக இருந்த, 1950, 1960ம் ஆண்டுகளில், சி.சுப்ரமணியம் மற்றும் ரா.வெங்கடராமன் ஆகியோரின் சீரிய முயற்சியால், பல துறைகளில் இந்த மாநிலம் அதிவேக வளர்ச்சி பெற்றது. கடந்த, 1967ம் ஆண்டு தொடங்கிய திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், பொருளாதார வளர்ச்சிக்குக் கொடுத்த முக்கியத்துவம், வெகுவாகக் குறைந்து, அரசின் பெருவாரியான வருமானம், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமின்றி, விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்களை இலவசமாக அளிப்பதில் செலவிடப்பட்டு வருகிறது.

வசதியற்ற, மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசங்களை அள்ளித் தருவதில், மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், வசதி படைத்தவர்கள் உள்ளிட்ட தமிழகத்தின், ஏழு கோடிக்கும் அதிகமான எல்லாத்தர மக்களுக்கும், இத்தகைய சலுகைகளை அளிப்பதன் மூலம், அரசின் மூலதனம் வீணாகிறது. இரண்டாவதாக, இத்தகைய மானியங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு ஊழல் மலிகிறது. உதாரணமாக, தி.மு.க., அரசின், ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம். தமிழகத்தின் கணிசமான பகுதியினர், இந்த அரிசியை வாங்குவதில்லை. ஆனால், இத்தகைய அரிசி, எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுவதாக கணக்குக்காட்டி, அந்த அரிசி, கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுவதாக பரவலாக நம்பப்படுகிறது. ஒரு கோடியே, 60 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, இலவச கலர் "டிவி' பெட்டிகள் அளிக்கப்பட்டன. இது, கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள மொத்த குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை. இவர்கள் அனைவரும், மிக வறுமை நிலையில் உள்ளவர்களா அல்லது அனைவருக்கும் இலவசமாக, "டிவி' பெட்டிகள் தேவையா? இவற்றில் கணிசமான பகுதியினருக்கு, மின்சார வசதிக்கூட கிடையாது. இந்த, "டிவி' பெட்டியை இவர்கள் பெற்று என்ன செய்வர்? இதே முறையில், அரவை இயந்திரம், மிக்சி, மின் விசிறி போன்றவற்றையும் இலவசமாக அளிப்பதாக, திராவிடக் கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளன. இது பகுத்தறிவிற்கும், அரசியல் சாசனத்திற்கும் ஒவ்வாதது.

இந்த வழிமுறை, பரவலாக ஊழல் செய்வதற்கு வகை செய்கிறது. தேவையற்றவர்களுக்கும், இத்தகைய சாதனங்கள் கொடுத்ததாகக் கணக்கு காட்டப்படும். இலவச, "டிவி' பெட்டிகள் அளிப்பதற்கு, அரசுக்கு, 4,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு. இந்த தொகையில், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் ஒன்று அமைக்கலாம். மின்பற்றாக்குறையால் அவதிப்படும் மக்களுக்கு, இந்த, 1,000 மெகாவாட் உற்பத்தி நீண்டகாலம் பலனை அளிக்கும். உலகெங்கிலும் மானிங்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழேயுள்ள மக்களுக்கும், செலவு செய்யக்கூடிய நிலையில் இல்லாத மக்களுக்கும், அத்தியாவசியத் தேவைப் பொருட்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்வதற்காக அளிக்கப்படுபவை. அரசியல் கட்சிகள், ஓட்டுகளைப் பெறுவதற்காக, இத்தகைய ஆடம்பரப் பொருட்களை இலவசமாக அளிப்பது வருந்தத்தக்கது.

கடந்த, 1989ம் ஆண்டு, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் அளிக்கும் திட்டம், தி.மு.க., அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த கால கட்டத்தில், அரசுக்கு இதனால், ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் செலவு. இந்த, 20 ஆண்டுகளில் இது, 20 மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், தண்ணீர் பற்றாக்குறை உள்ள தமிழ் மாநிலத்தில், நிலத்தடி நீர் பெருமளவில் இறைக்கப்பட்டு விரயமாகிறது. உபயோகிக்கப்படும் தண்ணீரில், 75 சதவீதத்திற்கும் மேல், விவசாய உற்பத்திக்கு செலவிடப்படுகிறது. இதில் பெரும் பகுதி வீணாக்கப்படுகிறது. வங்கதேசத்தில், இத்தகைய கட்டுப்பாடின்றி நீரை இறைத்ததன் மூலம், "ஆர்சனிக்' என்ற ரசாயனப் பொருள், நிலத்தடி நீருடன் கலந்து, கொடிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. சரி... இத்தகைய இலவச மின்சாரத்தின் மூலம், தமிழகத்தில் உணவு உற்பத்தி பெருகி உள்ளதா என்றால், இல்லை. கடந்த பல ஆண்டுகளில், உணவு உற்பத்தியில் தமிழகம், பின்னடைந்து வருகிறது. பசுமைப் புரட்சி ஆரம்பித்த காலகட்டத்தில், அதாவது, 1966-68ம் ஆண்டுகளில், தமிழகத்தின் உணவு உற்பத்தி, 59 லட்சம் டன். பஞ்சாப் மாநிலத்தில், இது, 41 லட்சம் டன்களாக இருந்தது. 40 ஆண்டுகளுக்கு பிறகு, 2009-10ம் ஆண்டில், பஞ்சாப் மாநிலத்தின் உணவு உற்பத்தி, 273 லட்சம் டன்கள். அதாவது, 6.5 மடங்குக்கும் அதிகம். தமிழகத்தில் இது, 80 லட்சம் டன்களாக மட்டுமே உயர்ந்துள்ளது. அதாவது, மூன்றில் ஒரு பங்கு, ஆண்டின் சராசரி உணவு உற்பத்தி 1 சதவீதத்திற்கும் குறைவு என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, மக்கள் பெருக்கத்தின் உயர்வை விடக் குறைவு. இந்த, 40 ஆண்டுகளில், மாநிலத்தின் மொத்த வருமானத்தில், விவசாயத்தின் பங்கு வெகுவாகக் குறைந்து, இன்று 13-14 சதவீதமாக உள்ளது. ஆனால், விவசாயத்தை நம்பி வாழும் மக்கள், இன்னும் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகம். ஆகவே தான், பலவகையான இலவசத் திட்டங்கள் அளித்தாலும், விவசாயத்தை நம்பி கிராமப்புறங்களில் வாழும் பெருவாரியான மக்களுக்கு, பொருளாதார வளர்ச்சியால் பயன் கிட்டவில்லை. அரசு அலுவலர்கள், பெரிய தொழில் மற்றும் சேவை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வியாபாரிகள் போன்றவர்கள் மட்டுமே, 9 சதவீத பொருளாதார வளர்ச்சியால் பயனடைந்து வருகின்றனர்.

அரசு அடிப்படை கட்டுமான வசதிகளைப் பெருக்குவதில், சிறப்புக் கவனம் செலுத்தினால், தனி மனிதனின் உற்பத்தி திறனும், வருமானமும் பெருகும். வறுமை வெகுவாகக் குறைந்து, மானியங்களின் தேவை குறைந்துவிடும். இதற்கு அரசியல் கட்சிகள், அடுத்த, 10-20 ஆண்டுகளில், வளர்ச்சித் திட்டங்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஆனால், தமிழகத்தில் அரசியல் கட்சிகள், மிகக்குறுகிய கண்ணோட்டத்துடன், தேர்தல் நேரங்களில் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க, நீண்டகால திட்டங்களைத் தீட்டுவதில் கவனம் செலுத்துவதில்லை. கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலம், தமிழகத்தை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. அரசின் ஆண்டு வரி வருமானமும், திட்டச் செலவினங்களும், தமிழகத்தை விட, குறைவாக இருந்தன. இன்று, இது வெகு வேகமாக அதிகரித்து, மிக அதிகளவில் உள்ளது. நடப்பாண்டு, 2011-12 ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, ஆந்திர மாநிலத்தின் வருவாய், 1 லட்சத்து, 995 கோடி ரூபாய். தமிழகத்தின் வருவாய், 79 ஆயிரத்து, 413 கோடி ரூபாய். இதேபோன்று திட்ட செலவினங்கள், ஆந்திர மாநிலத்தில், 47 ஆயிரத்து, 558 கோடி ரூபாய்; தமிழகத்தில் இது, 22 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே.

நிதி திட்டங்களுக்கும், மற்ற முக்கியமான செலவினங்களுக்கும், தமிழகத்தில் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவு. ஏனெனில், திரட்டப்படும் நிதியில் பெருமளவு, அரசு ஊழியர்கள் சம்பளம், பென்ஷன், மானியம் மற்றும் பலவகை இலவசங்களுக்காக செலவிடப்படுகிறது; வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவது மிகக் குறைந்துள்ளது. ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய், இலவச மின்சார திட்டத்தின் மூலம், அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் செலவழித்து வருகின்றன. இந்த தொகையை கொண்டு, 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட ஒரு மின் நிலையத்தை, ஆண்டுதோறும் நிறுவ முடியும். அதாவது, ஐந்து ஆண்டுகளில் மட்டும், 5,000 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க முடியும். ஆனால், 1992ல் தொடங்கி, 2007ம் ஆண்டுவரை, மூன்று ஐந்தாண்டு திட்டங்களில், தமிழகத்தில் மிகச் சொற்ப அளவிலேயே மின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவு தான், இன்று நிலவும் மாநிலம் தழுவிய மின்பற்றாக்குறை. அடிப்படை வசதிகள் செய்து தர, அரசின் நிதி நிலையில் இடம் இல்லை. செய்யும் சில வளர்ச்சித் திட்டங்கள் கூட, அதிகளவில் கடன் பெற்றுத்தான் செயல்படுத்தப்படுகின்றன. அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இதை சரிசெய்ய அரசு, சீரிய முயற்சி செய்யவில்லை. கடந்த, 2005-10ம் ஆண்டுகளில், தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு, 7.4 சதவீதம். இது, அகில இந்தியாவின் சராசரி வளர்ச்சி விகிதத்தை விட, 8.7 சதவீதம் குறைவு. குஜராத் 11.3, அரியானா 11, பீகார் 9.6, கர்நாடகம் 8.5, கேரளா 8.1, உத்திரகாண்ட் 7.8 என்ற அளவில் வளர்ச்சி விகிதம் உள்ளது. மேற்கண்ட மாநிலங்களின் வளர்ச்சி விகிதத்தை விட, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைவு. இலவசத் திட்டங்கள் இதே கதியில் தொடர்ந்தால், அடுத்து வரும் ஐந்தாண்டுகளின் வளர்ச்சி, இன்னும் சரிந்து, தமிழகம் ஒரு பின் தங்கிய மாநிலமாக ஆகக்கூடும். email:indecom@airtelmail.in

No comments:

Post a Comment